மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே நேற்று பொறுப்பேற்றார். இதனையடுத்து சஹ்யாத்ரி விருந்தினர் மாளிகையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே-பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

முதல்வராக பதவியேற்ற பிறகு உத்தவ் தாக்கரே மேற்கொண்ட முதல் செய்தியாளர்கள் சந்திப்பு என்பதால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 

பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் செய்தியாளர் ஒருவர், பொது குறைந்தபட்ச செயல் திட்டத்தில் மதசார்ப்பற்ற என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் சிவ சேனா தற்போது மதசார்பற்ற கட்சியாக மாறி விட்டதா? என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் உத்தவ் தாக்கரே கோபத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் மதசார்ப்பற்ற என்ற சொல்லுக்கு பொருள் என்ன? என பதில் கேள்வி கேட்டார். 

அதற்கு அந்த செய்தியாளர் அதற்கான பதிலை உங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன் என பதில் கொடுத்தார். இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாகுவதை தடுக்க அருகில் இருந்த அமைச்சர் சாகன் புஜ்பால் மதசார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.