கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேவியாநந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி (வயது 19) இவரும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் ரங்கசாமி என்பவரும் காதலித்ததாககூறப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி சரஸ்வதியை துப்பட்டாவால் இருக்கி படுகொலை செய்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.

இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.