தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் புதுமுகங்கள் பலர் அமைச்சர் பதவியை நோக்கி காய் நகர்த்தியதால் உதயநிதி டென்சன் ஆனதாகவும், மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் முதல் உதயநிதி ஸ்டாலினும், டிசம்பர் முதல் மு.க.ஸ்டாலினும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தேர்தலுக்கான பிரச்சாரம் ஓயும் வரை இருவரும் ஓய்வு எடுக்கவே இல்லை என்பது தான் நிதர்சனம். சுமார் நான்கு மாதங்கள் தமிழகம் முழுவதும் பம்பரமாய் சுற்றிச் சுழன்று தேர்தலை முடித்த நிலையில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் வெளிநாடு செல்வது என்கிற முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்த காரணத்தினால் லண்டன் செல்ல முடியவில்லை. இதன் பிறகு மாலத்தீவு செல்லலாம் என்று திட்டமிட்ட போது அதுவும் ரிஸ்க் என்று முடிவுக்கு வந்து சென்னையிலேயே இருந்துவிட ஸ்டாலின் முடிவு செய்தார்.

இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடங்கி கட்சியில் அண்மையில் இணைந்து எம்எல்ஏ சீட் பெற்ற பலரும் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கத் தொடங்கியுள்ளனர். முதலில் சீனியர்களை மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் சந்தித்துக் கொண்டிருந்தார். ஆனால் சீனியர்கள் பேச்சுவாக்கில் அமைச்சரவையில் தனக்கான இடம், இலாக்காக்கள் குறித்து பேச ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். இதனை மு.க.ஸ்டாலின் சுத்தமாக ரசிக்கவில்லை என்று சொல்கிறார்கள். கடந்த முறையும் இப்படித்தான் வாக்குப்பதிவு முடிந்த கையோடு தன்னை வந்து சந்தித்த சீனியர்கள் அமைச்சர் பதவிக்கான துண்டை போட ஆரம்பித்தனர்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் வேறு மாதிரியாக வந்தது. இதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே கட்சியில் கோலோச்சிய சீனியர்கள் பலரின் வாரிசுகளும் அமைச்சர் பதவி ஆசையுடன் ஸ்டாலின் வீட்டை சுற்ற ஆரம்பித்துள்ளனர். அத்தோடு உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து அமைச்சர் பதவிக்கான ஆசையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் உதயநிதி டென்சன் ஆகி யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் சென்னையில் இருந்தால் கட்சிப்பணி என்று கூறி நிர்வாகிகள் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ வருவதை தவிர்க்க முடியாது என்கிற முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளார்.

இதனை அடுத்தே வெளிநாடு இல்லை என்றாலும் பரவாயில்லை தமிழ்நாட்டிலேயே உதகை அல்லது கொடைக்கானல் செல்லலாம் என்று முடிவெடுத்து தனி விமானத்தில் குடும்பத்துடன் ஸ்டாலின் கொடைக்கானல் சென்று இருக்கிறார். தற்போது தலைவர் ஓய்வில் இருக்கிறார் என்று கூறி சீனியர்கள் மட்டும் அல்ல மாவட்டச் செயலாளர்களையும் கூட ஸ்டாலின் அருகே நெருங்கவிடாமல் கேட் போடப்பட்டுள்ளது. இதே போல் உதயநிதியும் ஓய்வில் இருப்பதாக கூறி தனது படை பரிவாரங்களை தனக்கு அருகே அனுமதிக்காமல் கொடைக்கானலில் உலா வந்து கொண்டிருக்கிறார்.