என்னுடைய அப்பா செட்டாப் பாக்ஸ் கொடுப்பார் என்று திமுக நிகழ்ச்சியில் நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி தெரிவித்தார்.

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பிராட்வே பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முரசொலி நிர்வாக மேலாண் இயக்குநரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்,சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

“திமுக சார்பில் நடைபெற்று வரும் கிராம சபை கூட்டங்களில், நான் 6 கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது ஒரு மாணவி என்னிடம் கலைஞர் தாத்தா டி.வி கொடுத்தார். நீங்கள் செட்டாப் பாக்ஸ் கொடுப்பீர்களா என்று கேட்டார். அதற்கு நான் தாத்தா டிவி கொடுத்தார். என்னுடைய அப்பா (மு.க.ஸ்டாலின்) செட்டாப் பாக்ஸ் கொடுப்பார் என்று கூறினேன். இதை அப்பாவிடம் கூறியபோது மிகவும் சந்தோஷப்பட்டார். 

இதுபோல மக்களுக்கு தேவையானதை செய்யும் ஒரே ஆட்சி திமுகதான். 40 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதுமட்டுமல்ல, 21 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்துக்கு விரைவில் நல்லாட்சி ஏற்படும்.”என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.