தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் இக்கூட்டத்தை நடத்தினால் தாங்காது என்பதால், தனியார் ஓட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உதயநிதி இளைஞரணி செயலாளரான பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

சென்னையில் திமுக இளைஞரணி அமைப்பாளர்களின் கூட்டத்துக்கு அதன் மாநில செயலாளர் உதயநிதி ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மீது இளைஞரணி நிர்வாகிகள் புகார் வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக இளைஞரணி செயலாளராக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்களை உதயநிதி நடத்தினார். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக இளைஞரணி அமைப்பாளர்களின் கூட்டத்தை நடத்த உதயநிதி ஸ்டாலின் விரும்பினார். அதன் அடிப்படையில் தற்போது திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25-ம் தேதி கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.