'அரசியலுக்கு யார் யாரோ வராங்க. வரப்போறாங்கன்னு சொல்வார்கள். நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என, தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்  அறிவுறுத்தியுள்ளார்.

 

கடலுார் மாவட்டம், வடலுாரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ’’தி.மு.க., சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார். பொதுமக்கள் தன்னெழுச்சியாக கையெழுத்திட்டதால், 2 கோடியை தாண்டியது.

இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என்றேன். இது சாத்தியமா என கேள்வி எழுப்பினர். சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என, பல்வேறு பணிகள் இருந்தாலும், இளைஞரணி அமைப்பாளர்கள், மாவட்ட செயலர்களின் ஒத்துழைப்போடு 80 சதவீதம் இலக்கை அடைய முடிந்தது. பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் கொள்கை பிடிப்போடு உள்ளவர்களை தேர்வு செய்து, இளைஞரணியி்ல் சேர்க்குமாறு மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கூறினேன். அது போன்றே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசியலுக்கு யார் யாரோ வராங்க. வரப்போறாங்கன்னு சொல்வாங்க. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பேசியதைதான் இப்போதும் பேசுகின்றனர். அடுத்தாண்டு வரப்போவதாக கூறுவார்கள். இதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்தாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் அவருக்கு ஆதரவு கிடையாது.

 உள்ளாட்சித் தேர்தலில் 75 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். ஓட்டு எண்ணிக்கை சரியாக நடந்திருந்தால் 90 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம். தமிழக மக்கள் நல்ல முடிவு எடுத்து 2021ம் ஆண்டில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். அ.தி.மு.க., விற்கும், அக்கட்சியை வழி நடத்தி கொண்டிருக்கும் பா.ஜ., விற்கும் தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்’’என அவர் தெரிவித்தார்.