தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்கம் செய்ய எடுத்த முயற்சிகளுக்கு தற்காலிகமாக பிரேக் விழுந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸை சரி கட்டும் வேலையில் அதிமுக ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மே 23-க்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் 118 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சிதான் ஆட்சியில் இருக்க முடியும். தற்போதைய நிலையில் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தவிர்த்து அதிமுகவுக்கு சட்டப்பேரவையில் 107 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். மே 23-க்கு பிறகு ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்றால், 10 தொகுதிகளில் அதிமுக கட்டாயம் வென்றாக வேண்டும்.
எனவே ஆட்சியைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளை ஆளும்கட்சி தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தினகரன் அணியோடு இருந்த 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஆளுங்கட்சி முயற்சி செய்தது. 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் இரு எம்.எல்.ஏ.க்கள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவுப் பிறப்பித்தது.


இதனால் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை ஒரு மாத காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மே 23-க்கு பிறகே அந்த வழக்கின் மீதான விவரம் தெரியவரும். இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மூன்று எம்.எல்.ஏ.க்களையும் தக்க வைக்கும் முயற்சிகளை அதிமுக தொடங்கியிருக்கிறது. தனியரசு அதிமுகவுடன் இணக்கமாகவே இருந்துவருகிறார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். கருணாஸ் அவ்வப்போது பூடாகமாகப் பேசிவருகிறார்.
எனவே மூன்று எம்.எல்.ஏ.க்களில் இரண்டு எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு அதிமுகவுக்கு எதிராகவே இருந்துவருகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்பதால், இவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வர முயற்சித்துவருகிறது ஆளுங்கட்சி. அவர்களை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பை தனியரசு எம்.எல்.ஏ.விடமே கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருவதால், தனியரசுவிடம் பணியைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதிமுக சார்பாக கருணாஸ், தமிமுன் அன்சாரியுடன் தனியரசு  தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. எனவே, இரு எம்.எல்.ஏ.க்களும் தங்களை மீறி செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஆளுங்கட்சி உள்ளது.