Two Leaves Case Hearing adjourned for Nov 01


இரட்டை இலை தொடர்பான வழக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் நடைபெற்றது.

இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அணியினர் பங்கேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார், கே பி முனுசாமி, மனோஜ் பாண்டியன், வா.மைத்ரேயன் எம்.பி., உள்ளிட்டோர் இந்த விசாரணையில் பங்கேற்றனர். 

முன்னதாக, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதிக்க முடியாது என்றும், நவ.10 ஆம் தேதிக்குள் இதனை முடித்துக் கொள்ளலாம் என்றும், நவ.10 ஆம் தேதி என்பது கட்டாயக் கெடு அல்ல என்றும், வசதிப்பட்டபடி அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என்று இரு தரப்பும் கூறிவருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியினரும் ஒன்றாக இணைந்து தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். மறு புறத்தில், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினர் இரட்டை இலை தங்களுக்கே என்று உரிமை கோரி சில ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த முதல் கட்ட விசாரணை கடந்த 6ஆம் தேதி இந்திய தேர்தல் அதிகாரி ஏ.கே.ஜோதி தலைமையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட விசாரணை 13ஆம் தேதி நடந்தது. 

மூன்றாம் கட்ட விசாரணை கடந்த 23ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று தொடங்கியது விசாரணை. தினகரன் தரப்பு மேலும் நேரம் கேட்க, நாளை மதியம் 3 மணிக்கு என்று கூறப்பட்டது. அதற்கு எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பும் நாளை மதியம் 3 மணிக்கு என்றுகூற, தினகரன் தரப்பு நாளை தங்கள் கவுன்சில் இல்லை என்று முறையிட்டதால், நாளை மறுநாள் 3 மணிக்கு இறுதி விசாரணையை முடித்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதை ஏற்று, வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்கு இந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.