two interviews completely changes the peoples mind over it raids and corruption issue
தமிழகத்தின் அண்மைக் கால பரபரப்பு, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடையவர்களின் வீடுகள் அலுவலகங்களில் நடைபெற்ற அதிரடி வருமான வரி சோதனைகள்தான்.
இந்த சோதனைகள் அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தேசிய அளவில் இந்த சோதனைகள் குறித்து பேசப்பட்டது. தமிழக அரசியல் வட்டத்திலும் எதிர்த்தும், ஆதரித்தும் இரண்டும் கெட்ட நிலையிலும் பலவிதமான கருத்துகள் களை கட்டின. இந்த சோதனைகள் குறித்து வெறும் செய்திகளில் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த சாதாரண மக்களோ, ஏன் இப்படி நடத்துகிறார்கள் என்றோ, அம்மாடியோவ்... எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளார்கள் என்றோ வாய் பிளந்து ஆச்சரியமாகக் கேட்டார்கள்.
கடந்த வியாழக்கிழமை இந்த வருமான வரித்துறையின் சோதனை துவங்கியது. அப்போது அரசியல் கட்சிகளும் சரி, சசிகலா ஆதரவு குழுக்களும் சரி, இதனை ஏதோ பழிவாங்கல் நடவடிக்கை என்றே கருத்து பரப்பிக் கொண்டிருந்தார்கள். மத்திய அரசின் நெருக்கடிக்கு, மாநில அரசு பணிந்துவிட்டதாகவும், எனவே இதனை மாநில அரசின் பழிவாங்கல் என்றும் கூட தினகரன் ஆதரவாளர்கள் கருத்து பரப்பி, அனுதாபம் தேட முயன்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஊடகங்களில் வந்த இரண்டு பேட்டிகள் எல்லாவற்றையும் மாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஜெயா டிவி.,யை நிர்வகித்து வந்த விவேக் ஜெயராமன், தங்கள் ஜெயா டிவி., மற்றும் ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றில் நடந்த சோதனைகள் குறித்து தாமதமாக வெளியில் வந்து கருத்து சொன்னார். அப்போது, ''யார் தப்பா பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும்'' என்று நியாயவாதம் பேசிச் சென்றார்.
அடுத்து, இன்னொரு பேட்டி. இது டிடிவி தினகரனிடம் இருந்து வந்த வார்த்தைகள். அதுவரையிலும் தினகரன் சிரித்தபடி, ஏதோ புன்னகை மலர, எந்த வித நெருக்கடியையும் தாங்கிக் கொள்பவர் போல் வெளிப்படுத்தி வந்த இமேஜ், பின்னர் மாறிப்போனது.
''என்ன... அதிக பட்சம் ஒரு இருபது ஆண்டுகள் உள்ளே வெப்பாங்களா..? அதுக்குப் பிறகு நான் வெளியே வந்து ஒரு கை பார்க்காம விட மாட்டேனா என்ன..?!'' என்று தினகரன் உதிர்த்த வார்த்தைகள்... உண்மையில் பலருக்கும் அதிர்ச்சி தந்த ஒரு பேட்டிதான்!
இருவரின் பேட்டிகளையும் ஆழ்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரியும்... முதலாமவர் பேட்டியில், தப்பா பணம் சம்பாதித்தாலும், வருமான வரித்துறைக்கு வரி கட்டிட்டாபோதும் என்று நினைப்பில் இருப்பது புரிகிறது. இரண்டாவது பேட்டியான தினகரன் பேட்டியில் சட்டப்படி நடவடிக்கைகள் 'சீராக'ப் போனால் எங்கே போய் முடிந்து எவ்வளவு நாள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்பதை அவரே ஊகித்துக்கொண்டு, எதிர்பார்த்தபடி தவறுகளைச் செய்துவிட்டுச் சொல்வது தெரிகிறது.
என்னமோ... போங்க... தீயா பேட்டி கொடுக்கணும் கொமாரு என்றுதான் சமூக ஊடகவாசிகள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
