two assistant proffessor escapped
நீதிமன்றக் காவலில் இருக்கும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 போராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கத் தூண்டுதலாக இருந்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அவரை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை 12 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பேராசிரியை நிர்மலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவரும் திருச்சுழியைச் சேர்ந்த கருப்பசாமியும், துறைத் தலைவராகப் பணியாற்றும் மதுரை முருகனும் தன்னை இந்தச் செயலுக்குத் தூண்டியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாக்குமூலத்தில், “அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இளங்கலை முடித்தேன். அருப்புக்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முடித்தேன். அஞ்சல் மூலம் எம்.பில் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்தபோது கருப்பசாமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அதே போல் துறைத் தலைவர் முருகனுடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தினால் பல காரியங்களை சாதிக்கலாம் என ஆசையை ஏற்படுத்தினர். அதனால் தான், நான் மாணவிகளிடம் பேசினேன். கல்லூரி நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட மோதலால், வாட்ஸ்அப் ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியைக் கைப்பற்ற, பேராசிரியை நிர்மலாதேவி இதுபோன்று மாணவிகளைத் தூண்டி இழிவான செயல்களை செய்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கருப்பசாமியையும்,முருகனையும் போலீஸார் தேடிச் சென்றபோது அவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர் பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, பேராசியை பேசிய அந்த 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் எங்கே எனக் கேட்டதும் அவர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து நிர்மலாதேவி குறிப்பிட்ட அந்த 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதால் அவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
