சர்கார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று படக்குழு படத்தின் காட்சிகளை நீக்கி மறு தணிக்கை செய்துள்ளது. தணிக்கை துறையிடம் முறையாகச் சான்றிதழ் பெற்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், தடை கேட்பதும், திரையரங்குகளில் பேனர்களை கிழிப்பதும் திரைத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்கார் படக்குழுவினருக்கு ஆதரவாகக் கமல், ரஜினி கருத்து கூறிய நிலையில்  திரையுலக பிரபலங்கள் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மெர்சல் படத்தைப்போலவே அதிமுகவினரின் எதிர்ப்பு காரணமாக சர்கார் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இதை தொடர்ந்து சர்கார் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

 இதுகுறித்து  தனது டிவிட்டில், தமிழ்நாட்டு மக்கள் மீது அரசு தனது அதிகாரத்தை தவறுதலாக திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்க பார்ப்பது எல்லாம் புதிதல்ல, இதையெல்லாம் ஏற்கனவே பல விஜய் படங்களில் பார்த்துவிட்டோம். அரசியல்வாதிகள் ஏன் இந்த விவகாரத்தை இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டார்கள். பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக, என்றுள்ளார்.