Tutucorin Gun Fire
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் 100-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
அப்பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
ஆத்திரமடைந் பொதுமக்கள் கற்களைக் கொண்டு வீசினர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்து அடித்து நொறுக்கினர். இதை அடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்புகைக் குண்டு வீசப்பட்டது.
இதனால் போராட்டக்காரர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் தடுப்பையும் மீறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த அவர்கள்,
அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு தீ வைத்தனர்.
இந்த நிலையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். அப்போது பொதுமக்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், மணாவ அமைப்புகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் போலீசார் திட்டமிட்டு போலி என்கவுண்டர் செய்துள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம், மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிசூடு குறித்தும், அங்கு நடந்த வன்முறை குறித்தும் தமிழக அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது.
