Chief Minister speech at the Legislative Assembly

தூத்துக்குடி வன்முறைக்கு திமுகவே காரணம் என்று அப்பாவிகளின் ஊர்வலத்தால் திமுகவினர் பயன்பெற்றனர் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தனர். 

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்துக்கு திமுகவே காரணம் என்று குற்றம் சாட்டினார். போராட்டத்துக்கு திமுக எம்எல்ஏ கீதாஜீவன் காரணம் என்றும், கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற பேரணியின்போதுதான் வன்முறை ஏற்பட்டது என்றும் கூறினார். பேருந்துகளுக்கு சிலர் தீ வைக்கும் புகைப்படங்களையும் அவையில் காட்டி முதலமைச்சர் பேசினார்.

99 நாட்கள் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாவிகளின் ஊர்வலத்தால் திமுகவினர் பயன்பெற்றனர். தமிழக அரசுக்கு சில கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக நான் திமுகவைத்தான் குறிப்பிட்டேன். என்றும் தூத்துக்குடி மக்களின் 22 ஆண்டுகால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. விரும்பத்தகாத சூழல் குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.