Tuticorin - newly married Maniraj was shot dead

திருமணமாகி மூன்று மாதங்களே ஆன புது மாப்பிள்ளை மணிராஜ், தூத்துக்குடியில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 100-வது நாளில் நடந்த போராட்டத்தின்போது, பயங்கர கலவரம் ஏறப்ட்டது. போலீஸ் வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. 

இந்த கலவரத்தின் இறுதியில், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசாரின் கண்மூடித்தனமான இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று போலீசாரின் துப்பாக்கிசூட்டில் நேற்று உயிரிழந்தவர்களில் மணிராஜ் என்பவரும் ஒருவர், இவர் தூத்துக்குடியில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே முடிந்துள்ளன. அவரது மனைவி அனுஜா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மணிராஜ், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். மணிராஜின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரை உருக்குலைத்து விட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.