தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொது மக்கள் 100 நாட்களாக போராடி வந்தனர். நூறாவது நாளான கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அப்பாவிப் பொது மக்கள் 13 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு நீல் வைத்ததுடன் இனிமேல் இந்த ஆலை திறக்கப்படாது என்றும் அறிவித்தது. ஆனால் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி  வேதாந்த குழுமம் வார்பில் பலுமைத் தீர்ப்பாயம் மற்றும் உச்சநிதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான  விசாரணை ஆணையம் தற்போது விசாரணையை நடத்தி வருகிற்து.

இந்நிலையில் மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவருக்கு தற்போது விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டன் என்பவர் மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். அவருக்கு விசாரணை ஆணையம் அனுப்பியுள்ள சம்மனில் வரும் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்ட்டுள்ளது.

முறையான தகவல்களை  திரட்டாமல் இறந்து போனவருக்கு அதுவும் எதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதோ, அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு சம்மன் அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக சமுக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.