கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னை முதல்வராக்கி இருப்பார் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் நடைபெறும் கோவை சூலூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்கள், எப்போதும் துரோகக் கூட்டத்திற்கு துணை நிற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக தேர்வு செய்தோம். ஆனால் அவர் பாஜகவின் ஏஜென்டாகவே செயல்பட்டு வந்தார். 

அதன்பிறகு தான் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். சிறைக்குச் செல்லும் முன்பு கூட சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராகத் தேர்வு செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் பதவிக்கு ஆசைப்படுவர்கள் அல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி நான்கு கால் பிராணி போல எப்படி தவழ்ந்து வந்து பொதுச்செயலாளர் சசிகலா காலில் விழுந்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கலாம். ஆனால் பதவி வெறி இருக்கக்கூடாது. முதல்வர் எடப்பாடியின் பதவி வெறியால் தான் தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தீர்மானித்து, குஜராத்தின் மோடியா? அல்லது தமிழகத்தின் லேடியா? என்று சவால்விட்டார். ஜெயலலிதா யாருடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறினாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவை என்ற மாபெரும் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு அஞ்சு, நடுங்கி வருகின்றனர் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.