அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது வேதனை அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருவதாக வெளியாகும் செய்தி வேதனை அளிக்கிறது. தரமான மருந்துகளை, குறைவான விலையில் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் 2014-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்த இந்த மருந்துக்கடைகளால் மக்கள் பெருமளவில் பயனடைந்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக அம்மா மருந்தகங்கள் படிப்படியாக பொலிவிழந்தன.

அம்மாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி வரும் பழனிசாமி அரசு, அம்மா மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒப்புக்கொண்டபடி ஊதியம் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் உரிய நேரத்தில் அளிக்கப்படாததால் அவர்கள் மருந்துகளை விநியோகப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். 

மேலும் காலாவதியான மருந்துகளைத் திருப்பி கொடுத்தாலும் அதற்குரிய பணத்தை மருந்து நிறுவனங்கள் தருவதில்லை என்றும் அந்தத் தொகையை மருந்தாளுனர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் அம்மா மருந்தகங்களில் பணியாற்றுகிற மருந்தாளுனர்கள் விரக்தியில் வேலையை விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் இத்தகைய அலட்சியமான நிர்வாகத்தால், தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் அடுத்தடுத்து அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றன. மற்ற இடங்களிலுள்ள மருந்தகங்களும் இந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்ய வேண்டிய கூட்டுறவுத்துறை அமைச்சரோ கண்டும் காணாமல் இருக்கிறார். எனவே, அம்மா மருந்தகங்களை மீண்டும் பழையபடி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துள்ளார்.