புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள டிடிவி ஆதரவாளர்கள், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் இன்று காலை, டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்ததைக் கண்டித்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, டிடிவி தினகரன் தரப்பினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறி, ஆளுநரிடம் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கடிதம் அளித்தனர்.

குதிரை பேரத்தை தவிர்க்கவே, டிடிவி ஆதரவாளர்கள் தற்போது, புதுவைச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களை, எடப்பாடி, ஓ.பி.எஸ் தரப்பினர் இழுப்பதை தவிர்க்கவே புதுச்சேரி செல்லப்பட்டதாக தெரிகிறது.

புதுச்சேரி, வீரம்பாட்டனத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்கியுள்ள உள்ள ரிசார்ட் முன்பு, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், டிடிவி தினகரனின் உருவபொம்மை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், விடுதி முன்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருவ படத்தினை எரித்தனர். தினகரன் உருவ பொம்மை எரிக்கப்பட்டதைக் கண்டித்து, டிடிவி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ படத்தை எரித்தனர்.