TTV Dinakaran Upset Tamilnadu Ministers Protest Against Vijayabaskar
விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று, மற்ற அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் தினகரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய, வருமானவரி துறையினர் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதனால் ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானார். ஆனாலும், வரும் 17 ம் தேதி, அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும், இல்லையெனில், மற்றவர்களும் வருமான வரி சோதனையால் பாதிக்கப்பட நேரும் என்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
அதே சமயம், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், மற்ற அமைச்சர்கள் பற்றியும் அவர், வருமான வரித்துறைக்கு போட்டு கொடுத்துவிடுவார் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.
எனினும், மத்திய அரசின் தொடர் நெருக்கடி காரணமாக, விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.

ஒரு பக்கம் மத்திய அரசின் நெருக்கடி, மறுபக்கம் அமைச்சர்கள் தரப்பில் இருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் கடும் குழப்பத்தில் இருக்கிறார் தினகரன்.
முதல்வர் எடப்பாடி ஏற்கனவே, விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், அவர் மறுத்து விட்டார். அதனால், தம்பிதுரை, விஜயபாஸ்கரிடம் பேசி ராஜினாமா கடிதம் பெற முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
