ttv dinakaran twist speech in mannarkudi about eps rule

சென்னை ஆர்,கே,நகர் தொகுதியின் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என கூறியிருந்த நிலையில் தற்போது மாற்றத்துக்கு சில காலம் ஆகும் என பேக் அடித்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும், தற்போது உள்ள இபிஎஸ் தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்படும் என பேட்டி அளித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அடுத்து அவர் எங்கிருப்பார் என்று அவருக்கே தெரியாத நிலையில் அவரால் ஆட்சியை அசைக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் டி.டி.வி.தினகரனை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அமைந்திருந்தது என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை கூட இருக்கும் நிலையில், டிடிவி தினகரன் முதன்முதலாக சட்டப்பேரவையில் பேச இருக்கிறார்.

இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள தட்டன்கோவில் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவினர் தோல்வி பயத்தால் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் என்ன பேசப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்த தினகரன், ஆட்சி மாற்றம் எல்லாம் ஒரு நாளில் வந்துவிடாது என்றும் அதற்கு சில காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

இது வரை தனது தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பேசி வந்த டி.டி.வி.தினகரனின் இந்த பேச்சு அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.