திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். மேலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நடைபெறறது.

அப்போது, ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியதை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய திமுக, இனி அவர்கள் எப்போதுமே சிறையிலிருந்து விடுதலையாக முடியாதபடி அரசாணையும் பிறப்பித்தது. திமுகவின் இந்த துரோகத்திற்கு பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மருந்து போடுவதாக அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.