அன்றைக்கு நான்கு கால் பிராணியாகத் தவழ்ந்து வந்து சசிகலாவின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன? என தினகரன் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியாக உள்ள 4 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்காக முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூலூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து தினகரன் நேற்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இருகூர் ரோடு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த தினகரன், “கொங்கு மக்கள் எப்போதும் துரோகத்துக்குத் துணை நிற்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்க இந்த இடைத் தேர்தல் வந்துள்ளது. கொங்கு மண்டலம் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்றென்றும் ஆதரவாக இருந்த பகுதி. அதனால்தான் தான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார் சசிகலா.

அவர் மட்டும் நினைத்திருந்தால் அவரது அக்கா மகனாகிய என்னை முதல்வராக்கி இருக்கலாம். ஆனால், நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் இல்லை, அது உங்களுக்கே தெரியும்.  நாங்கள் எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள். அம்மா கூட பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். ஆனால், நம்ம சின்னம்மாவோ முதல்வராக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்றார்.

பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக பழனிசாமி செய்தது ராஜதந்திரமா? அன்றைக்கு நான்கு கால் பிராணியாகத் தவழ்ந்து வந்து சசிகலாவின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன? சுயம்பாக முதல்வராக வந்தால் காலில் விழக் காரணம் என்ன? என்று காட்டமாகக் கேள்விகளை அடுக்கினார்.

இந்த இடைத் தேர்தல் வரக் காரணமே அந்த துரோகி பழனிசாமியின் பதவி வெறிதான். தாய் ஸ்தானத்திலிருந்து முதல்வராக்கியவருக்கு, துரோகம் செய்தவர், இவரா தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்? வரும் இடைத் தேர்தலில் கொங்கு மண்டலம் தனது கறையைத் துடைக்க வேண்டும் என்று தினகரன் கேட்டுக்கொண்டார்.