புதுச்சேரியில் ஒரு கூவத்தூர்… டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு…

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும், புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும்  தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள்  எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு பிரிவாக இருந்த அ.தி.மு.க. அணிகள் நேற்று முன்தினம் இணைந்தன. இந்த இரு  அணிகள் இணைப்புக்கு துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியான சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நேற்று ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என்றும், உடனடியாக சட்டப் பேரவையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என 19 எம்எல்ஏக்களும் தனித்தனியாக கடிதம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் டி.டி.வி.ஆதரவு எம்எல்ஏக்கள் அணி மாறிவிடுவதைத் தடுக்க அவர்கள் அனைவரும் சொகுசு விடுதில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டுள்ளதால், இன்று சில அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி அந்த சொகுசு விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.