புதிதாக ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசைப் போல அறிவிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையே விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 104 கிணறுகளை அமைப்பதை ஏற்க முடியாது. 

தொடர்ந்து இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் முதல்வர் பழனிசாமி அரசு, உடனடியாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசைப் போல அறிவிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், அவர் கூறுகையில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று நாளைய கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள். நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் இந்த ஜனநாயக வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.