தங்களுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை கொடுக்கத் தயாராக உள்ளார்கள் என்று ஆளுங்கட்சி மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மே 19 அன்று 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக ஆட்சி தொடருமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், இத்தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரனும் 4 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை விமர்சித்துவருகிறார். ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட தினகரன், ஆளும்  தரப்பு ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
டி.டி.வி தினகரன் செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தபோது, “ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜை    பதவி நீக்கம் செய்ததால்  தற்போது இங்கே இடைத்தேர்தல் வந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதற்காக நம்பிக்கை ஓட்டெடுப்பில் வாக்களித்தவர் சுந்தர்ராஜ். தற்போது அவர் பதவியை இழந்து உங்கள் முன்பு நிற்கிறார்.


இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கையில்  இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தங்களுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஓட்டுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்த இடைத்தேர்தலில் எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.” என்று பேசினார்.