பெயர் காரணத்திற்காக நாஞ்சில் சம்பத் விலகியுள்ளது வருத்தம் அளிக்கிறது எனவும் அம்மாவை அவர் அவமதிக்கக்கூடாது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டிடிவி  தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். 

அந்த பொதுக்கூட்டத்தில் டிடிவி அணியின் சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் பங்கேற்கவில்லை. அதனால் பெரும் பரபரப்பு கிளம்பியது. 

இதையடுத்து இதற்கு விளக்கம் கொடுத்த நாஞ்சில் சம்பத், குரங்கணி தீ விபத்தில் தனது மைத்துனர் மகன் இறந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று நாஞ்சில் சம்பத்  வெளியிட்ட அறிக்கையில் டிடிவி தினகரன் அறிவித்துள்ள கட்சி பெயரில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும்,  அண்ணாவும் , திராவிடமும் இல்லாத  டிடிவி  அணியில் நீடிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். 

இதைதொடந்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில், தினகரன் அணியினர் என்னிடம் சமாதானம் பேச நினைப்பது வீண் வேலை எனவும் அன்னை தமிழ் மீது ஆணை இனி தினகரன் அணியில் சேர மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து இதற்கு விளக்கம் கொடுத்தார். அப்போது, பெயர் காரணத்திற்காக நாஞ்சில் சம்பத் விலகியுள்ளது வருத்தம் அளிக்கிறது எனவும் அம்மாவை அவர் அவமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். 

அண்ணா, எம்.ஜி.ஆர், பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா எனவும் அண்ணாவையும் திராவிடத்தையும் அவமதித்தது போல் நாஞ்சில் சம்பத் பேசுகிறார் எனவும் குறிப்பிட்டார். 

தற்போது துவங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடைக்கால ஏற்பாடு மட்டுமே எனவும் தெரிவித்தார்.