மேலூரில் நேற்று நடந்த கூட்டம் தொடக்கம் தான் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மோதல் முற்றி வரும் நிலையில், நேற்று மதுரை மாவட்டம் மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அணிகளாக பிளவுபட்ட அதிமுக இணைப்பு குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பேசி வருகின்றனர். விரைவில் இணைப்பு நடைபெறும் என்று கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனின் மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசும்போது, பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருப்பார் என்றும் தினகரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்துக்குப் பின்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், மேலூரில் நடந்த கூட்டம் தொடக்கம்தான் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்.

அதிமுவின் 1.5 கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பது நேற்றைய கூட்டம் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார்.

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் பயணித்து வருகிறோம். 2019 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைப்பதே எங்கள் நோக்கம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.