உப்பை தின்றவன் தண்ணி குடித்துதான் ஆகணும்... "ஆடியோ" பற்றி தினகரன் பரபரப்பு பேச்சு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரனின ஆதரவாளர் வெற்றிவேல், எம்.பி. ஒருவருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்கு என்றும் எம்.பி.யோட அப்பாவுக்கு என்ன வயசுன்னு முடிவு பண்ணிக்கோங்க என்று அணுகுண்டு ஒன்றை கொளுத்திப் போட்டிருந்தார். 

இந்த நிலையில், வெற்றிவேல் குறிப்பிட்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயாருடன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த ஆடியோவானது, ரெக்கமன்டேஷனுக்காக வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் என்ற தலைப்புடன் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதில், அமைச்சர் ஜெயக்குமார். ரெக்கமன்டேஷன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாகவும், அதை கலைக்க அவர் முயற்சி செய்வது போலவும், கர்ப்பமான பெண்ணின் தாயார் அவரிடம் பணம் வாங்க முயற்சிப்பது போலவும் ஆடியோ வெளியாகி உள்ளது.

நன்றாக இருக்கும் பெண்ணுக்கே திருமணம் செய்து வைக்க முடியவில்லை... இதில் என் மகளுக்கு கரு கலைந்தது தெரிந்தால் என்ன செய்வது. என்னை என் உறவினர்கள் அடிக்கிறார்கள் என்கிறார் பெண்ணின் தாயார். அதற்கு, என்னை நேரில் வந்து சந்தியுங்கள் என்று ஆண் ஒருவர் பேசுகிறார்.

அந்த ஆடியோவில், எந்தவொரு இடத்திலும் தமிழக அமைச்சர் என்றோ... ஜெயக்குமார் என்றோ குறிப்பிடப்படவில்லை. ஆண் குரல் ஜெயக்குமார் என்பதுபோன்று உள்ளதால் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்தான் என்பதுபோல் பரவி வருகிறது. 

5 நாட்களாக உலா வரும் இந்த ஆடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை

இந்த நிலையில், டிடிவி தினகரன், பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் இருக்கும் சசிகலாவை சந்தித்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மேற்கண்ட ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஜெயக்குமாரின் ஆடியோவை நானும் கேட்டேன். உப்பைத் தின்றவன் தண்ணி குடித்துதான் ஆக வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறினார்.