TTV Dinakaran is touring the whole of Tamil Nadu from 24th

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாளை மறுநாள் முதல் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக கூறினார்.

வரும் 24 ஆம் தேதி முதல் வேலூர், திருச்சி, சேலம் மண்டங்களில் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின்போது மண்டலம் வாரியாக ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாட உள்ளார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார். 

நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை கைப்பற்றுவோம் என்று எடப்பாடி அணியினர் அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தங்களைப் பற்றி செய்திபோட ஆள் இல்லாததால் இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளதாக கூறினார்.

அதிமுக அணிகள் இணைப்புக்காக அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் விடுத்திருந்த கெடு கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திக்கவும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள் உள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களுக்காக டிடிவி தினகரனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டிடிவி தினகரன்,
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.