ttv dinakaran enquiry
சென்னை அழைத்து வரப்படும் டி.டி.வி.தினகரன்… முக்கிய இடங்களில் விசாரணை நடத்த திட்டம்…
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை இன்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த டெல்லி பொலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த 16–ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது.
இதையொட்டி 37 மணி நேரம் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீசார் அவரையும், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரையும் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு டெல்லி போலீசார் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது.

இதையடுத்து, தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
