அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக அனைத்து கொகுதிகளிலும் போட்டியிட்டது. அந்தக் கட்சி அதிமுக மற்றும் திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அமமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மொத்தத்தில் அக்கட்சி 6 சதவீத வாக்குகளையே பெற்றது. போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் அமமுக தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் டெபாசிட்டும் இழந்தது.

இந்த தோல்விக்கும் பின்  அமமுகவில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது. ஏற்கனவே அமமுகவின் முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி திமுகவுக்கு சென்ற நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து தங்க தமிழ் செல்வனும் திமுகவுக்கு தாவினார்.

மேலும் நேற்று  இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்தடுத்து அமமுகவில் இருந்து  முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறி வருவதால் டி.டி.வி.தினகரன் கடும் அப்செட்டில் உள்ளார்.

அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்த அறந்தாங்கி ரத்தின சபாபதி நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தடம் மாறினார். தற்போது தொடர் சறுக்கல் குறித்து தினகரன் இன்று மதியம் பெங்களூரு  சிறையில் உள்ள சசிகலாவை பார்த்து விவாதிக்க உள்ளார்.

அமமுகவில் இருந்து  அக்கட்சியின் நிர்வாகிகள் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருவதால் அக்கட்சியின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதையடுத்து மேலும் சிலர் விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த அமமுக நிர்வாகிளான நடிகர் ரஞ்சித், டான்ஸ் மாஸ்டர் கலா, பாடகர் மனோ இவர்களும் மிக விரைவில் மாற்று கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.