திமுக, அதிமுக கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், தினகரன் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்டும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுகவை மீண்டும் மீட்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு கட்சி நடத்தி வரும் தினகரன், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காகக் காத்திருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தினகரன். இதனால், அதிமுகவில் காட்சிகள் மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் - இபிஎஸ் பக்கமே அணிவகுத்தனர். 

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் தேர்தல் நடந்தால், அவற்றில் வெற்றிக் கனியைப் பறித்து அதிமுகவை தன் வழிக்குக் கொண்டுவர தினகரன் நினைத்தார். ஆனால், எதிர்பார்த்தபடி தேர்தல் நடைபெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தத் தேர்தல்தான் தினகரன் தனது பலத்தைக் காட்ட ஒரே வாய்ப்பு. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவைவிட அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றால், மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் தனக்கே இருப்பதை தினகரன் நிரூபிக்கலாம். 

அதற்காகத்தான் தற்போது தினகரன் காய் நகர்த்தி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணியும் உறுதியாகிவிட்டது. அதிமுக கூட்டணியில் சேருவதில் இழுபறி நீடித்துவரும் நிலையில், தமாகா மட்டுமே இன்னும் தங்கள் நிலைப்பாட்டைப் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. ஒரு வேளை இந்த இரு கட்சிகளும் அதிமுக பக்கம் சாய்ந்தால், தினகரன் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகும். 

தற்போதைய நிலையில், தனித்து போட்டியிடும் சூழல் வந்தால், அதற்கும் தயாராகவே தினகரன் இருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர், “40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டே டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார்” என்று கூறி வருகிறார்கள். தற்போதைய நிலையில் 40 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் தயார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி அக்கட்சியினர் சிலரிடம் விசாரித்தபோது, “1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தபோது, ஜெயலலிதா 27 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொண்டர்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளையும் இடங்களையும் பிடித்து, அதிமுக தொண்டர்களின் ஆதரவு தனக்கே இருக்கிறது என தினகரன் நிரூபிப்பார். இதற்காக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தினகரன் தயாராகிவிட்டார்” என்று தெரிவித்தார்கள்.