அதிமுகவை அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் டி.டி.வி,.தினகரன் செயல்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.

 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ., வி.வி.ராஜன் செல்லப்பா, ‘’அதிமுகவுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது. ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்து உள்ளார்கள். 2 ஆண்டுகளுக்கும் அதற்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடரும். 

ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சொன்னார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. திமுகவில் பல நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர். திமுகவில் வெற்றி பெற்ற எம்.பி-க்கள் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி என்ன தவறு செய்தது என தெரியவில்லை. மதுரை மக்களவை தொகுதியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் வெற்றி கிடைத்து இருக்கும். சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்.

சு.வெங்கடேசன் மக்களுக்காக கொண்டு வர கூடிய திட்டங்களை தடுக்க கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மக்கள் சிறு தவறு செய்து உள்ளார்கள். மதுரையில் தொழில் வளம் குறைந்தற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம். தினகரன் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. தினகரன் வசம் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும். தினகரன் திமுகவின் வெற்றிக்கு உதவி உள்ளார். அதிமுகவை அழிக்க நினைத்து தேர்தலில் போட்டியிட்டார். அதிமுகவுக்கு எதிரான பிரச்சினை வரும்போது இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ராஜதந்திரத்தை கையாளுவார்கள். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளோம். பல தடைகளை தாண்டி தேர்தலில் போட்டியிட்டோம்.

 

தமிழக வாழ்வாதார பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் திமுக என்ன செய்ய போகிறது என பார்ப்போம். அதிமுகவில் சரியான தலைமை உள்ளது. சு.வெங்கடேசன் மதுரையின் மாறுபட்ட கலாச்சாரத்தை கொண்டு வந்தால் அதை மக்களே எதிர்ப்பார்கள்" என அவர் எச்சரித்துள்ளார்.