தேர்தலுக்கு பிறகு அதிமுக தன் வசம் வந்து விடும் என பேராவலில் இருந்த டி.டி.வி.தினகரனின் கணக்கில் பேரிடி விழுந்து விட்டது. இப்போது அமமுகவிலிருந்து முக்கிய தலைகள் அதிமுகவுக்கு தாவ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளன. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டே நாட்களில் அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான திருநெல்வேலி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தன் அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார். 

அமமுகவை பலம் வாய்ந்த கட்சியாகவும், டி.டி.வி.தினகரன் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுப்பார் என எதிர்பார்த்திருந்த அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும், தேர்தல் நிலவரத்திற்கு பிறகு உண்மையை உண்ர்ந்து அதிர்ச்சியாகிக் கிடக்கின்றனர். 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக டெபாசிட் இழந்து படு தோல்வியை தழுவியது.

இந்த தோல்வி டி.டி.வி.தினகரனுக்கு அதிமுகவினர் ஆதரவளிக்கவில்லை என எடுத்துரைத்துள்ளது. ஆகையால் இனியும் டி.டி.வி.தினகரனை நம்பி இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் எனக் கருத்திய அக்கட்சி நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.