பெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள். இன்னும் சொல்லப்போனால் ஜல்லிக்கட்டில் சாகசம் செய்யும் காளைகள் பலரை புகழ்பெற்ற நபர்களாக்கி விடுகிறது.

 

இன்று நடந்த உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல் விஐபிகளுஇன் காளைகள் களமிறங்கி கவனம் ஈர்த்தன. இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் காளை, அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜு சகோதரர் வளர்த்த காளை, உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதியின் காளை,  காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் காளை, திமுக, அதிமுக நிர்வாகிகளின் காளைகள் என பலரது காளைகள் அலங்காநல்லூரில் துள்ளிக்குதித்தன. 

டி.டி.வி.தினகரனின் காளைக்கு ரூ.5000 ரொக்கம் பரிசாக அறிவிக்கப்பட்டது. அரசியல் களத்தில் நின்று விளையாடும் தினகரனை போலவே அவரது காளையும் சுற்றிவந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிடிபடாமல் சென்றது. அந்தக் காளைக்கு பக்கத்தில் கூட யாரும் நெருங்கவில்லை. இதனைன் அறிவிக்கும்போது அமைச்சர்கள், ஓபிஎஸ் தம்பி ராஜா உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் இருந்து ரசித்தனர். 

சசிகலாவின் கருப்பு நிறக்காளை துள்ளி குதித்து தாவிச்சென்று ஓடியது. இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளையும் பிடிபடவில்லை, அமைச்சர் செல்லூர் ராஜின் தம்பியின் காளையும் பிடிபடவில்லை. ஓபிஎஸ் தனது வீட்டிலும் அமைச்சரான பின்னர் கிரீன்வேஸ் சாலையிலும் இரண்டு காளைகளை அவர் வளர்த்து வந்தார். அதேபோல் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் புகழ்ப்பெற்றது. ஆனால் சமீபத்தில் அது உயிரிழந்தது.