புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து சர்வ தேச விதிகளுக்கு முரணாக அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூடன்குளம் அணுஉலை செயல்பட 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த 15 நிபந்தனைகளில், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான ஏற்பாடுகளை (AWAY FROM REACTOR) 5 ஆண்டுகளில் செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாகும். ஆனால், இன்று வரை அத்தகைய ஏற்பாட்டினை மத்திய அரசு செய்து முடிக்கவில்லை. மாறாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்குரிய முழுமையான தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லி, இன்னொரு 5 ஆண்டு கால அவகாசத்தைக் கேட்டு பெற்று வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கூடன்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு சேமிப்பு மையத்தினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை, வருகிற ஜூலை 10 ஆம் தேதி ராதாபுரத்தில் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூடன்குளம் அணு உலைகளே ஆபத்தானவை என்று அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதை விட ஆபத்தான அணுக்கழிவுகளையும் அந்த வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க நினைப்பது மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத ஈவு இரக்கமற்ற செயலாகும்.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலகளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இதுவரை இந்தியாவிடம் இல்லை என்பதைக் கடந்த ஆண்டு மத்திய அரசே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்காலிக ஏற்பாடுகளை நம்பி கூடன்குளத்தில் அணுமின் நிலையங்களைத் தொடர்ந்து இயக்கி அணுக்கழிவுகளைக் குவித்துவருவது பேராபத்தில் முடிந்துவிடும்.

எனவே அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வெளியிடும் வரை, கூடன்குளத்தில் தற்போதுள்ள இரண்டு உலைகளின் இயக்கத்தையும், புதிதாக 4 உலைகள் அமைப்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.

தமிழ் மக்களை சோதனை எலிகளாக நினைத்து மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பற்ற அணுக்கழிவு சேமிப்பு நடவடிக்கையைப் பழனிச்சாமி அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் தடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து சர்வ தேச விதிகளுக்கு முரணாக அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை நிறுத்த வேண்டும்" என தினகரன் தெரிவித்துள்ளார்.