டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவாக செயல்பட்டு வந்த விருத்தாசலம் கலைச்செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

 

நேற்று மாலை அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு வந்த அறங்தாங்கி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’என்னை போல் பிரபுவும் கலைச்செல்வனும் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

அதேபோல் இன்று விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைசெல்வன் இன்று அதிமுகவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலைசெல்வன், ‘’அண்ணன் தம்பி பிரச்னை. அனைத்து பிரச்சனைகளும் இப்போது முடிந்து விட்டது. அதிமுக ஆட்சியை டி.டி.வி.தினகரன் கலைக்க வேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபம் இல்லை. ஆட்சி கலைப்புக்கு யாரும் உடன்பட மாட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு படி நடந்து கொள்வோம். மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் சென்று சேர்ந்து வருகிறது. இருக்கும் இடத்தை உணர்ந்து டி.டி.வி.தினகரன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.