அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது. இனி அடுத்து வரும் தேர்தல்களில் வென்று காட்டுவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம் என்றும் இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று தேர்தல் சமயத்தில் டிடிவி.தினகரன் கூறினார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வந்தனர். அக்கட்சியில் நம்பிக்கையாக நட்சத்திரமாக திகழ்ந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். இது டி.டி.வி.தினகரனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதனையடுத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

இந்நிலையில், சுவாமிமலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேட்டியளிக்கையில், அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி, எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்.எல்.ஏ.வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும். மக்கள் நலனுக்காக போராட வேண்டியது தான் அரசியல் இயக்கத்தின் முதல் கொள்கையாக இருக்க வேண்டும். 

மேலும், பேசிய அவர் இந்த தேர்தல் தோல்வி என்பது எங்களை கொஞ்சமும் பாதிக்கவில்லை. எங்களின் நிர்வாகிகளிடம் இதை பார்க்கலாம். யாரோ ஒரு சிலர் சுயநலத்துக்காக சென்றுவிட்டார்களே தவிர தொண்டர்கள் செல்லவில்லை. அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது. வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை கொடுக்கின்ற போது தான் அமமுகவின் பலம் என்ன என்பது தெரியும். டெல்டா மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் டிடிவி. தினகரன் குறிப்பிட்டார்.