மே. 23க்கு பிறகு மோடியோட டாடி வந்தாலும் அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஹார்விபட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சியே கிடையாது. இதைத் தமிழக மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலிலும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு வாக்களிக்காமல், அமமுகவுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதியிலும் மக்கள் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.


மே 23-ம் தேதியைத் துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் தினமாக நாம் கொண்டாட வேண்டும். தற்போது அவர்களுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ள காரணத்தால்தான் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மே. 23-ம் தேதிக்கு பிறகு மோடியோட டாடி வந்தாலும் அதிமுக அரசைக் காப்பாற்ற முடியாது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள், விசுவாசிகள் எல்லோரும் அமமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று டிடிவி தினகரன் பேசினார்.
பின்னர் மூலக்கரை பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, “அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துகிற எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் மக்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. தற்போது ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஆட்சியின் அவலத்துக்கு இதுவே சாட்சி. மக்களுக்கு விரோதியாக இருந்த சூரனை முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ததைபோல, வாக்காளர்களாகிய பொதுமக்கள் அமமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் துரோக ஆட்சியை சம்ஹாரம் செய்ய வேண்டும்.” என்று டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்.