முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அமமுக செய்தி தொடர்பாளர் சென்றதை தொடர்ந்து, அக்கட்சியின் செயலாளர் டி.டி.வி. தினகரன் 24-ம் புலிகேசியாக புகழேந்தி உருவெடுக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார். 

டி.டி.வி. தினகரன் மீது அதிருப்தியில் உள்ள அமமுகவைச் சேர்ந்த புகழேந்தி, சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி மாமியார் வீடு சேலத்தில் இருப்பதால் அருகில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று தீபாவளி வாழ்த்து கூறினேன். ஆனால், அதிமுகவில் இணைய வரவில்லை. 2 இடைத்தேர்தல் தொகுதியில் மாபெரும் வெற்றியடைந்ததற்காக முதல்வர் பழனிசாமி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து, இடைத்தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்தினேன் என்றார்.

சசிகலா ஜெயிலுக்குப் போகும் போது ஆட்சி, அரசு அதிகாரம் மற்றும் கட்சியை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டுப் போனார். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த குந்தகமும் இல்லாமல் வீறு நடை போடுகிறார்கள் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் என்று புகழேந்தி பாராட்டினார். 

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி. தினகரன் சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த தினகரன், கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? அ.ம.மு.க.வில் இருக்கிறாரா? என கூறவேண்டும்.

சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார். அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என டி.டி.வி.தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.