’மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நானே நிற்கலாமே’ என அமமுக துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சூசகமாக பதில் அளித்துள்ளார்.

 

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் தொகுதிகளையும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. அதன்படி அமமுக சார்பில் போட்டியிடும் 24 தொகுதிகளின் வேட்பாளர்கள், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இந்நிலையில் அமமுக தலைமை அலுவலகமான சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’3 மாதமாக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 22ம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது. ஓசூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். என தெரிவித்த அவர், தேனி தொகுதி முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி. ஆகையால் அங்கு என்னை மக்களவை வேட்பாளராக போட்டியிடக்கோரி எனது ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர். அதனால் நானே நிற்கும் நிலை உருவாகலாம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேனியை ஒட்டிய பெரியகுளம் தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவர் அறிவித்துள்ள 24 தொகுதிகளில் தேனி தொகுதி இடம்பெறவில்லை. தேனியில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதாலும் அங்கு அமமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாலும், அமமுக துனைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஓ.பி.எஸ் மகனை தோற்கடிக்க தேனி தொகுதியில் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.