கட்சியைவிட்டு வெளியேறி செல்வதாக இருந்தால் கிளம்பி விடுங்கள் என தனது வலதுகரமாக இருந்து வந்த தங்க தமிழ்செல்வனுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அமமுக படுதோல்வி அடைந்த பிறகு தங்க தமிழ்செல்வன் டி.டி.வி.தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் அதிமுகவில் இணைய தூது விட்டு வந்ததாகக் கூறப்பட்டது. அதற்காக எடப்பாடிக்கு தூது விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் தங்க தமிழ்செல்வன். அப்போது ‘’அமமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை டி.டி.வி.தினகரனிடமும் எடுத்துச் சொல்லி விட்டேன். 

தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாக தான் இருந்தது. அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது ரொம்ப பிடித்தமான திட்டம். அதற்காக முதல்வர் எடப்பாடியை பாராட்ட வேண்டும்’’ என அதிமுகவுக்கு ஆதரவாக பேசினார் தங்க தமிழ்செல்வன். இந்தப்பேட்டியை பார்த்த அதிர்ந்து போன டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வனை நேற்று இரவு அழைத்துப் பேசியிருக்கிறார்.

 

அப்போது, ‘கட்சியை விட்டு போய்விட நினைத்தால் போய் விடுங்கள். இங்கு இருந்து கொண்டே அமமுகவை மக்கள் ஏற்கவில்லை எனக் கூறிக் கொண்டு உள்ளுக்குள் குமைய வேண்டாம். அதிமுகவை பாராட்டி என்னிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம். நான் உங்களை கட்டுப்படுத்தவில்லை. நீங்கள் வெளியேறுவதாக இருந்தால் சீக்கிரம் முடிவெடுத்துக் கிளம்புங்கள். இருப்பவர்களை உறுதி செய்த பிறகு அவர்களுக்கு போஸ்டிங் போட உள்ளோம். அதனால் தாமதப்படுத்த வேண்டாம்’ எனக் கறாராக கூறி அனுப்பி வைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.