நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை டிடிவி.தினகரன் புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அமமுக வட்டாரத்தில் இருந்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், கட்சியின் பதிவு செய்யாதது ஒரு காரணம் என்றாலும், சசிகலாவின் உத்தரவுப்படியே தினகரன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் நடந்த நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி டெபாசிட் வாங்க முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. இதனால், கட்சியில் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதனால், செந்தில்பாலாஜி, தங்க தமிழிச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். 

இதைத்தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக போட்டியிடாது என தினகரன் அறிவித்தார். உட்கட்சி பிரச்னை முற்றிய நிலையில் கட்சி கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதையும் தினகரன் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அவ்வப்போது மட்டும் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு  வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக உள்ள புகழேந்தியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிட உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட  விரும்புவோர் விருப்ப மனுவும் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என தினகரன் அறிவித்துள்ளார். 

ஆனால், முக்கிய காரணம் சசிகலாவின் உத்தரவுப்படியே தினகரன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று அமமுக வட்டாரத்தில் உறுதிபட பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடந்தபோது அமமுக சார்பாக வேட்பாளரை நிறுத்த திட்டமிட்ட தினகரனை அழைத்த சசிகலா, இனிமேல் எந்தத் தேர்தலிலும் அமமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று அழுத்தமாகச் சொல்லியுள்ளார். கடந்த முறை சந்தித்தபோதும் இதே விஷயத்தை வலியுறுத்தியுள்ளார். 

மேலும், இந்த இடைத்தேர்தலிலும் ஓட்டுக்களை குறைவாக வாங்கினால் இருக்கிறவர்களும் ஓடிவிடுவார்கள் என்று  கருதியே, அவர் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.  அதனால்தான் கட்சிப் பதிவதைக் காரணம் காட்டி தற்போது நடைபெறப்போகும் இடைத் தேர்தலில் அமமுக வேட்பாளரை நிறுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.