Asianet News TamilAsianet News Tamil

பூர்வக்குடி மீனவர்களை கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிப்பதா..? மோடி அரசுக்கு சீமான் எச்சரிக்கை..!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து, மீன்பிடித் தொழிலைவிட்டே மீனவர்களை அப்புறப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடித்தொழிலைத் தாரைவார்த்து நாட்டின் பூர்வக்குடி மீனவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்ட வரைவு-2021ஐ உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

Trying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi government
Author
Chennai, First Published Jul 20, 2021, 8:45 PM IST

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுமைக்கும் நிலவும் அசாதாரணச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்களின் நலனுக்குப் புறம்பாகச் சட்டத்திருத்தங்களைச் செய்து எதேச்சதிகாரப்போக்கோடு நடந்து வரும் மத்தியஅரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. மாநிலங்களின் தன்னுரிமைகளைப் பறிக்கும் வகையில் புதிது புதிதாகச் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவது நாட்டைப் புதைகுழியில் தள்ளும் பேராபத்தாகும். மாநில அரசுகளை முழுவதுமாக அதிகாரமற்ற உள்ளாட்சி அமைப்பைப் போல மாற்ற முற்படும் மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகள் நாட்டின் இறையாண்மைக்கே ஊறு விளைவித்திடும் படுபாதகச்செயலாகும்.Trying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi government
பாஜக அரசின் இத்தகைய கொடுங்கோன்மை நடவடிக்கைகளின் நீட்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் மற்றொரு மக்கள் விரோதத் திட்டம்தான் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவிருக்கும் புதிய மீன்பிடி சட்டவரைவாகும். இப்புதிய சட்டவரைவின்படி, மீனவர்கள் குறிப்பிட்ட கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன்பிடிக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டிருக்கிறது. ரசாயனத் தொழிற்சாலைக்கழிவுகள், நெகிழி, குழைமக்கழிவுகள், அணு மற்றும் அனல்மின் நிலையங்களின் கழிவுகள் கலந்து கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரையிலான இடங்களில் மீன்கள் வாழ முடியாத சூழல் உருவாகி மீன்வளம் பெருமளவு குறைந்துவிட்டதாலும், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளும், பவளப்பாறை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதிகளும் இந்த 12 கடல் மைலுக்குள்தான் வருவதாலும் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதியானது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, கடற்சூழலியலையும் அழிக்கும் முயற்சியாகும்.
மேலும், இச்சட்ட வரைவின்படி, மீன்பிடிக்க உரிமம் பெற்றுத்தான் செல்ல வேண்டுமென்றால் அன்றாடங்காய்ச்சியாக வாழும் ஒரு ஏழை மீனவர் அரசின் அனுமதிபெற்று மீன்பிடிக்கச் செல்லும் வரை தொழிலற்றுப் பசியில் வாடும் நாட்களில் அவரது குடும்பத்தின் வருமானத்திற்கு அரசு பொறுப்பு ஏற்குமா? அத்துடன் இப்புதிய சட்டவரைவு மீன் பிடிக்கிற ஒவ்வொரு படகும் மீன்பிடிக்கு ஏற்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனும் புதிய விதியை உருவாக்குகிறது. கொள்ளை இலாபத்திற்காக வணிக ரீதியில் இயக்கப்படும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வணிக மீன்பிடிக் கப்பலுக்கும், வயிற்றுப்பிழைப்புக்காக மீன்பிடிக்கும் சாதாரண ஏழை மீனவரின் படகிற்கும் ஒரே மாதிரியான நிபந்தனைகளும், விதிமுறைகளும் விதிப்பது எப்படிச் சரியானதாக இருக்கும்? என்பது புரியவில்லை.Trying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi government
குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள்தான் மீன்பிடிக்க வேண்டுமெனவும், அதிலும் குறிப்பிட்ட ரூபாய் மதிப்புக்கு மேலாக மீன்களைப் பிடிக்கக்கூடாது எனவும் இச்சட்டவரைவுக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. இதனை மீறுவோருக்கு 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; விதிமீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள், வலைகளைப் பறிமுதல் செய்வதுடன் ஓராண்டு சிறைத் தண்டனை, மீன்பிடித்தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை உள்ளிட்ட கடும் விதிமுறைகளை இச்சட்டவரைவு உருவாக்கியுள்ளது. இந்த அபராதத்தொகையினை, தனியார் பெருநிறுவனங்கள் மட்டுமே செலுத்த முடியும். இதனால், பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் மீன்பிடி தொழிலைவிட்டே போக வேண்டிய துயரநிலை ஏற்படக்கூடும். இதிலிருந்தே இச்சட்டம் யாருக்காக இயற்றப்படுகிறது என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும்.
மீன்பிடித்தொழிலுக்கு உலக நாடுகளெல்லாம் மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கும்போது இந்திய அரசு மீன்பிடித்தொழிலுக்கும், பிடிக்கும் மீனுக்கும் கட்டணம் நிர்ணயிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமையாகும். ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் அந்நியச்செலாவணியை ஈட்டித் தந்து, 80% புரத உணவான மீனை நாட்டு மக்களின் உணவுத்தேவைக்காக அளிக்கும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படாதபோது, ஆழ்கடலில் மீன்பிடித்து அங்கேயே பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சந்தைப்படுத்தும் பெருங்கப்பல்களுக்கு மட்டும் வரியில்லா எரிபொருள் வழங்கப்படுவது ஏன்?Trying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi government
கடல்சீற்றத்தாலும், புயல், மழை போன்றவை காரணமாகவும் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட மீனவர்களை மீட்க எவ்வித நவீன திட்டங்களையும் முன்வைக்காத மோடி அரசு, மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதும், அவ்வாறு தடைவிதிப்பட்ட காலங்களில் எவ்விதத் துயர்துடைப்புத் தொகையும் அறிவிக்கப்படாததும் இப்புதிய வரைவு மிகப்பெரிய ஏமாற்று என்பதற்கான தக்கச் சான்றாகும். மீன்பிடிப்பதற்குக் கட்டணம், படகுக்குக் கட்டாய உரிமம், மீன்பிடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட மீன் வகைகளைப் பிடிக்கத் தடை, குறிப்பிட்ட அளவிற்குமேல் மீன்பிடிக்கத் தடை, வலை மற்றும் படகின் அளவிற்குக் கட்டுப்பாடு, அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளை நியமிப்பது, கண்காணிப்பு அமைப்பினை உருவாக்குவது என இச்சட்டவரைவின் விதிகள் முழுவதும் மீனவ மக்களை அச்சுறுத்தக்கூடிய தண்டம், கைது, பறிமுதல், தண்டனை என்ற சொல்லாடல்கள்தான் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், மீனவர்களை மீன்பிடித்தொழிலிருந்து அப்புறப்படுத்தி அதனைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே செய்யப்படும் சதிச்செயல் இதுவென்பது எவ்வித ஐயங்களுக்கும் இடமின்றித் தெளிவாகப் புலனாகிறது.
இத்தகைய கடுமையான மீன்பிடி விதிமுறைக் கொள்கைகளை உருவாக்கும்போது மீனவ மக்களிடமும், மாநில அரசுகளிடமும் கருத்துக்கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது மண்ணின் மக்களின் நலனைப் புறந்தள்ளுவது அவர்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் கொடுஞ்செயலாகும். ஏற்கெனவே, புயல் போன்ற இயற்கைச்சீற்றங்கள், சிங்களப் பேரினவாத அரசின் தொடர் தாக்குதல்கள், மீன்பிடித்தலுக்கு மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், ஒன்றிய அரசு விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றாலும் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித்தொழில் இப்புதிய சட்ட வரைவால் ஒட்டுமொத்தமாக அழிவை நோக்கிப்போகும் இழிநிலை ஏற்பட்டுள்ளது.Trying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi government
ஆகவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து, மீன்பிடித் தொழிலைவிட்டே மீனவர்களை அப்புறப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடித்தொழிலைத் தாரைவார்த்து நாட்டின் பூர்வக்குடி மீனவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்ட வரைவு-2021ஐ உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். மக்களின் எதிர்ப்புணர்வையும் மீறி, இப்புதிய சட்டவரைவைச் செயல்படுத்த மத்திய அரசு முனைந்தால், அதனை எதிர்த்து மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்குமென எச்சரிக்கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios