கமலுக்கு எதிராக பேசிவரும் தமிழக அமைச்சர்கள், பொது வெளியில் நாகரீகமாக பேச வேண்டும் என்றும் எல்லைக்குள் நின்று விமர்சிக்க வேண்டும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு அதிமுக அமைச்சர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல், கமலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமலின் பேச்சு குறித்து மு.க.ஸ்டாலின், ஓட்டுரிமை பெற்றிருக்கக் கூடியவர்களுக்கு ஜனநாயக ரீதியில் அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல் மீது வழக்கு போடுவோம் என்று சொல்பவர்கள், தமிழகத்தில் நடக்கும் ஊழல் குறித்து நான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறேன். தமிழக அமைச்சர்கள், கமல் ஹாசன் மீது வழக்கு போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், எங்கள் மீது வழக்குப்போட தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் சவாலை ஏற்க தமிழக அமைச்சர்கள் தயாரா? என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா எம்.பி., நடிகர் சிவாஜி கணேசனுக்குப் பிறகு மதிப்புமிக்க நடிகராக கமல் ஹாசன் உள்ளார். நடிகர் கமல் ஹாசனின் பேச்சுரிமையை தடுக்கும் அதிகாரத்தை அமைச்சர்களுக்கு கொடுத்தது யார்? அமைச்சர்கள், பொது வெளியில் பேசும்போது, நாகரீகமாகவும், எல்லைக்குள் நின்று விமர்சிக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. என்றும் கூறியுள்ளார்.