திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் முற்றுகை போராட்டத்தை படம்பிடிக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், பத்திரிகையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில், திருச்சி தென்னூரில் உள்ள இந்தி பிரசார சபாவை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த பெயர் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்து மத்திய அரசு மீதான எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இந்நிலையில், அந்த போராட்டம் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் அந்த நிகழ்வை படம்பிடிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களை போலீசார் தள்ளிவிட்டதால், பத்திரிகையாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுடன் போலீசார் சமாதானம் பேசினர்.