தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்துவிட்டாலும், திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவில் திருநாவுக்கரசர் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.  ‘நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை நானே பதவியில் இருப்பேன்’ எனச் சில தினங்களுக்கு முன்புதான் திருநாவுக்கரசர் கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே திருநாவுக்கரசரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

குறிப்பாக, எந்தப் பொதுத்தேர்தலையும் சந்திக்காமல் தலைவர் பதவியிலிருந்து நீக்கியதில் திருநாவுக்கரசருக்கும் வருத்தம் இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதே வேளையில் திருநாவுக்கரசருக்கும் அகில இந்திய தலைவர் ராகுல் காந்திக்கும் நல்ல புரிதல் உள்ளது. தமிழக காங்கிரஸில் நிலவும் பாரம்பரிய கோஷ்டி பூசல் திருநாவுக்கரசரும் அறிந்தவர் என்ற வகையில், கட்சி மேலிட நடவடிக்கையை அவர் ஏற்றுக்கொள்வார் என்றும் சொல்கிறார்கள் காங்கிரஸார்.  

மாநில பொறுப்பிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார். பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு கைமாறாக திருநாவுக்கரசர் விரும்பும் தொகுதியை காங்கிரஸ் மேலிடம் பெற்றுத் தரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பிலும், 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பிலும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் தோல்வியடைந்தார். இரண்டு முறை தோல்வியடைந்ததால், தற்போது அவரது பார்வை திருச்சி தொகுதி மீது திரும்பியிருக்கிறது. 

திருநாவுக்கரசரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையின் இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வருவதால், அந்தத் தொகுதியில் போட்டியிட திருநாவுக்கரசர் ஏற்கனவே கட்சி மேலிடத் தலைவர்களிடம் விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது திருநாவுக்கரசர் மாநில பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரை சமாதானப்படுத்தும் வகையில் திருச்சி தொகுதியை கட்சி மேலிடம் பெற்று தரும் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.