தி.மு.கவில் மு.க.ஸ்டாலின்கு பிறகு அதிகாரம் பொருந்திய நபர் யார் என்றால் அவரது மருமகன் சபரீசன் தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கூட்டணி பேச்சுவார்த்தை முதல் வேட்பாளர் தேர்வு வரை ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்தவர் இவர் தான் தற்போது இருப்பவரும் இவர் தான். நேரடியாக அரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும் தி.மு.க ஐ.டி. விங்கை மெயின்டய்ன் செய்வது சபரீசன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
   
அந்த வகையில் தி.மு.கவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்று ஒன்றை உருவாக்கி அதற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் சபாநாயகரும் மதுரை தி.மு.கவின் முக்கிய தளபதியாகவும் இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜனை நியமிக்க வைத்தவரும் சபரீசன் தான். அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே தனி அறைகள் இருந்தன.


   
இந்த வழக்கத்தை மாற்றி முதன் முறையாக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரான பழனிவேல் தியாகராஜனுக்கு தரைத்தளத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டது. கலைஞர் இருந்த போதே இந்த ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன. தி.மு.க தலைவர் கலைஞரின் மூத்த மகன் அழகிரி தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த போது அறிவாலயத்தில் தனக்கென தனி அறை கேட்டார்.
  
ஆனால் அழகிரிக்கு தனியாக அறை ஒதுக்க கலைஞர் அப்போது மறுத்துவிட்டார், ஆனால் பழனிவேல் தியாகராஜனுக்கு பிரத்யேகமாக அறை ஒதுக்கப்பட்டது என்றால் தி.மு.கவில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை பார்த்துக் கொள்ளலாம். இதனாலோ என்னவோ பழனிவேல் தியாகராஜனுக்கும், அண்ணா அறிவாலயத்திலேயே எப்போதும் இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோருக்கு ஏழாம் பொருத்தம் தான்.


   
பழனிவேல் தியாகராஜனை கவிழ்க்க சரியான நேரம் பார்த்து காத்திருந்த அறிவாலய நிர்வாகிகளுக்கு டி.ஆர்.பாலு மூலமாக சரியான வாய்ப்பு கிடைக்க அதனையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தனக்கு தனியாக ஒரு அறை அண்ணாஅறிவாலயத்தில் வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்க, அவரும் ஓ.கே சொல்லியுள்ளார். உடனடியாக எந்த அறையை ஒதுக்கலாம் என்று பேச்சு போக, தியாகராஜனின் அறையை ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.


   
அப்படி என்றால் அந்த அறையை டி.ஆர்.பாலுவுக்கு கொடுத்துவிடுங்கள் என்று ஸ்டாலின் கூறிவிட வாய்ப்பிற்கு காத்திருந்த நிர்வாகிகள் உடனடியாக அறையை காலி செய்யுமாறு தியாகராஜனிடம் கூறியுள்ளனர். தலைவரே கூறிவிட்டார் என்பது தெரிந்து மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் தியாகராஜன் அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனால் தான் மேல்மட்ட நிர்வாகிகள் டி.ஆர்.பாலு உள்ளே, தியாகராஜன் வெளியே என்று தற்போது முனுமுனத்து வருகின்றனர்.
   
ஆனால் இந்த விவகாரத்தை சபரீசன் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பத தெரியவில்லை.