விலைவாசி உயர்வு எரிபொருள் மீதான வரி உள்ளிட்டவை குறித்து மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை குறித்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

விலைவாசி உயர்வு எரிபொருள் மீதான வரி உள்ளிட்டவை குறித்து மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை குறித்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 1-8-2022 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் ஆகியவை குறித்து மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உரையாற்றினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருந்தபோதும் மாநில அரசு குறைக்க வில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறினார். நவம்பர் 2021 இல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021 பெட்ரோல் மீதான வரியை மூன்று ரூபாய் குறைத்துள்ளது. மேலும் மத்திய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது.

அதாவது பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாக குறைந்துள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி ஐந்து ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியது, 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது, டீசல் மீதான வரியை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 1 ரூபாய் 76 பைசா குறைக்க ப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு மீன்வளத் துறையிலும் போக்குவரத்து துறையிடம் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகின்றது.

கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி வந்தது. இதனால் மத்திய அரசிற்கு வருவாய் பல லட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும், அதற்கேற்ப மாநில அரசுகளின் வருவாயில் உயர்வு ஏற்படவில்லை, ஏனென்றால் மாநில அரசுகளுடன் பகிரக் கூடிய கலால் வரியை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247சதவீதமாகவும் ) டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790சதவீதமாகவும்) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி வந்துள்ளது. நவம்பர் 2021 மற்றும் மே 2021 சேர்த்து பெட்ரோல் மீதான வரியை 13 ரூபாயாகவும் டீசல் மீதான வரியை 16 ரூபாயாகவும் குறைந்துள்ளது. மத்திய அரசு தனது வரிகளை குறைத்துள்ள நிலையிலும் 2014 ஆம் ஆண்டில் உள்ள வரிகளை ஒப்பிடும்போது தற்போது உள்ள ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு 10.42 ரூபாயும் (110) டீசல் விலை லிட்டருக்கு 12.23 ரூபாயும் (342) இன்னும் அதிகமாகவே உள்ளன. ஆகவே மத்திய அரசு தனது வரிகளை மேலும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது. 

3.11.2021 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால் மாநில அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மே 2022-ல் அறிவித்துள்ள வரி குறைப்பால், மாநில அரசுக்கு மேலும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பின் முடிவு மூன்று கட்டங்களில் எடுக்கப்பட்டது, மூன்றாம் கட்டம் அதாவது சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தின் கூட்டத்தில்தான் வரிவிதிப்பதற்கான பரிந்துரைகள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தில் அடிப்படை கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இதில் ஒன்றிய அரசிற்கு 33 சதவீத வாக்கும் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் தலா இரண்டு சதவீத வாக்கும் உள்ளது. பெரிய மாநிலம் அல்லது சிறிய மாநிலம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 சதவீத வாக்கு மட்டுமே. இவ்வாறு உள்கட்டமைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் பரிந்துரையை தடுக்க வேண்டுமென்றால் ஏறத்தாழ 25 மாநிலங்களில் ஒருமித்த ஆதரவு வேண்டும் அல்லது மத்திய அரசின் ஆதரவு வேண்டும் மேலும் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

விவாதத்திற்கு பின் மாண்புமிகு அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த 56 பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.21 சதவீதம் மற்றும் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.16 சதவீதம், ஆனால் மத்திய வரிகளில் இருந்து நமக்கு பகிர்ந்தளிக்கபடுவதோ வெறும் 4.079 சதவீதம் மட்டுமே. தொடர்ந்து வந்த நிதி குழுக்களால் தமிழ்நாட்டிற்கு நிதி பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை.

உரிய பங்கு தொடர்ந்து குறைந்து வந்துள்ளது, சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவு குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயை பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை, எனவே சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு, மத்திய அரசுக்குத்தான் வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளது. அதை பயன்படுத்தி மத்திய அரசு வரிச் சுமையை குறைக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.