நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, நாடாளுமன்றத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்து பேசினார். 

அப்போது , கடந்த 5 ஆண்டுகளில், 40 ஆயிரம் கி.மீ. நீள நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. சில எம்.பி.க்கள், பல்வேறு பகுதிகளில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அப்படி வசூலிக்கப்படும் பணம், கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் சாலை அமைப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.

சுங்க கட்டண வசூல், எனது மூளையில் உதித்த திட்டம். கட்டணம், காலத்துக்கு தகுந்தாற்போல் மாறுபடலாம். ஆனால், சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது. அது நீடிக்கும். 

நல்ல சாலைகள் வேண்டுமானால், சுங்க கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசிடம் பணம் இல்லை. இருப்பினும், எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி பஸ்கள் மற்றும் மாநில அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.